தமிழக செய்திகள்

திருப்பூரில் தாய் - மகள் கொலை: கைதான எம்.பி.ஏ. மாணவன் பரபரப்பு வாக்குமூலம்

பூவரசி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அக்சயனுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

திருப்பூர்,

திருப்பூரில் தாய் - மகளை கொலை செய்த எம்.பி.ஏ. மாணவன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் காதல்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பச்சாபாளையத்தை சேர்ந்த தம்பதி பழனிசாமி - தனலட்சுமி. இவர்களது மகள் பூவரசிக்கும் (வயது 25). திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அக்சயன் என்ற வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பூவரசி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அக்சயனுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

வெட்டி கொலை

இதனால், ஆத்திரம் அடைந்த அக்சயன், நேற்று பூவரசியின் வீட்டிற்கே நேரடியாக சென்று தகராறில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே, சுற்றும் முற்றும் பார்த்த அக்சயன், வீட்டில் ஓரமாக இருந்த அரிவாளை எடுத்து கண் இமைக்கும் நேரத்தில் பூவரசியை வெட்டினார். தடுக்க வந்த தாய் தனலட்சுமியையும் (45) வெட்டினார். இதில், தாய் - மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அங்கு கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

பரபரப்பு வாக்குமூலம்

ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் நின்ற அக்சயனை பிடித்து, கயிற்றால் கையை கட்டிவைத்து பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார், தாய் - மகள் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலையாளி அக்சயனையும் கைது செய்தனர்.

காவல் நிலையம் அழைத்து சென்று அக்சயனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காதலாக மாறிய நட்பு

நான் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவன். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கும் பல்லடத்தை சேர்ந்த பூவரசிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய நாங்கள், பின்பு செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு பேசத் தொடங்கினோம்.

அதன்பிறகு, நேரில் சந்திக்க முடிவு செய்தோம். பூவரசியை பார்க்க நான் பல்லடம் சென்றேன். அங்கு பூவரசியுடனான முதல் சந்திப்பிலேயே எங்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. கடந்த 4 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தோம்.

வேலைக்கு சென்ற பிறகு திருமணம்

பூவரசி வீட்டிற்கு ஒரே பெண் என்பதால், எங்களுடைய இந்த காதலை அவருடைய பெற்றோர் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறினார். படிப்பு முடிந்து வேலைக்கு சென்ற பிறகு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம்.

ஆனால், அதற்கு முன்பாக நண்பர்கள் முன்னிலையில் பூவரசிக்கு சிறிய தங்கச் சங்கிலியை கழுத்தில் அணிவித்தேன். இந்த தங்க சங்கிலியை பார்த்த அவரது தாயார், இதுகுறித்து பூவரசியிடம் விசாரித்துள்ளார். அவரும் எங்களுடைய காதலை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

பேசுவதை குறைத்தார்

இதற்கு பூவரசியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, பூவரசியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. என்னுடன் பேசுவதை படிப்படியாக குறைத்துக்கொண்டார். 6 மாதமாக பொறுத்து பார்த்த நானும், அவரை நேரடியாக சந்தித்து பேசினேன்.

அப்போது பூவரசி, பெற்றோர் எதிர்பதால் நாம் பிரிந்துவிடலாம் என்று கூறினார். ஆனால், பூவரசி இல்லாமல் என்னால் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்தேன். பூவரசியின் வீட்டிற்கே சென்று அவரது பெற்றோரிடம் பெண் கேட்க முடிவு செய்தேன். கடந்த 3 நாட்களாக பல்லடத்தில் விடுதியில் தங்கி, வீட்டின் முகவரியை கண்டுபிடித்தேன். 10-ந் தேதி மாலை அவரது வீட்டிற்கு சென்று பெண் கேட்டபோது, என்னை திட்டி வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டனர்.

ஆத்திரத்தில் கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த நான், எனக்கு கிடைக்காத பூவரசி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று நினைத்தேன். 11-ந் தேதி (நேற்று) காலை 8 மணிக்கு மீண்டும் பூவரசியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டேன். அப்போது, பூவரசியின் தாய் தனலட்சுமி என்னை திட்டி வெளியே போகச் சொன்னார். அப்போதும் நான், எனது எதிர்கால திட்டங்கள், பூவரசியை திருமணம் செய்துகொண்டு எதிர்கால கனவுகள் அனைத்தையும் கூறினேன். எங்களுடைய காதலை சேர்த்து வையுங்கள். பூவரசியை மகாராணிபோல் பார்த்துக்கொள்கிறேன் என்று கெஞ்சினேன். ஆனால், பூவரசியின் தாயார், என்னை கேவலமாக பேசி வெளியே போகச் சொன்னார். இதனால், ஆத்திரம் அடைந்த நான் பூவரசியையும் அவரது தாயாரையும் கொலை செய்தேன்

இவ்வாறு அவர் போலீசிடம் கூறியுள்ளார்.