தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பத்திரஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஆறல் குந்தி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (35 வயது). இவரது மனைவி பரிமளா (29 வயது). இந்த தம்பதிக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருந்தது. பரிமளாவிற்கு மனநல பாதிப்பு இருந்ததாகவும், அதற்காக அவர் தொடர் சிகிச்சையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலையில் சிவக்குமார் எழுந்து பார்க்கும்போது பரிமளாவும் குழந்தையும் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார். அப்போது வீட்டில் இருந்து சற்று தூரத்தில், இருந்த மழைநீர் குட்டை அருகே மனைவியின் துணி மற்றும் செருப்பு இருப்பதை கண்டு கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வந்து குட்டையில் தேடிய போது, பரிமளா மற்றும் ஒன்றரை வயது குழந்தையின் உடலை மீட்டனர். இதுதொடர்பான தகவலின் பேரில் ஏரியூர் போலீசார் விரைந்து வந்து தாய், மகள் ஆகியோரது உடல்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தையுடன் பரிமளா தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.