ஆற்காடு,
ஆற்காடு அருகே மது குடித்ததை தட்டிக்கேட்ட தாயை மகன் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடை அடுத்த கீழ்விஷாரம் குளத்துமேடு பகுதியை சேர்த்தவர் அம்சா (வயது 70). கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவர் இறந்த நிலையில் மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். இவருடைய மூத்த மகன் வினோத்குமார் (35). தினமும் இவர் மது குடித்து விட்டு வந்து தாயாருடன் தகராறு செய்து வந்துள்ளார்.
வழக்கம் போல இவர் நேற்று இரவு வினோத்குமார் மதுபோதையில் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. இதனை தாயார் அம்சா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வினோத்குமார் வீட்டில் மாட்டி வைத்திருந்த தனது தந்தையின் போட்டோ பிரேமை எடுத்து தாய் அம்சாவின் தலையில் அடித்துள்ளார். இதில் நெற்றியில் வெட்டுக் காயம் ஏற்பட்டு அம்சா சரிந்து விழுந்தார். மேலும் வினோத்குமார் கத்தியால் தாயை குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அம்சா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆற்காடு டவுன் போலீசார். உயிரிழந்த அம்சாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வினோத் குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.