சேலம்,
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குருக்குப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மனைவி சுசீலா. இந்த தம்பதிக்கு கவுசல்யா தேவி (18 வயது) என்ற மகளும், ஒரு மகனும் இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடாசலம் இறந்துவிட்டார். இதனால் சுசீலா கூலி வேலைக்கு சென்று தனது குழந்தைகளை படிக்க வைத்தார்.
மகள் கவுசல்யா தேவி மேட்டூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்தார். அவர் சில பாடங்களில் தேர்ச்சி பெறாமல் இருந்துள்ளார். மேலும் கவுசல்யா தேவி அதிக நேரம் செல்போன் பார்த்ததாக தெரிகிறது. இதனால் தாய் சுசீலா, கவுசல்யா தேவியை அதிக நேரம் செல்போன் பார்க்க கூடாது எனவும், நீ நன்றாக படிக்க வேண்டும் எனவும் கூறி கண்டித்துள்ளார்.
தாய் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி கவுசல்யா தேவி சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று வந்த பின்னர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மாணவி கவுசல்யா தேவி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.