சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாட்டின் இளைஞர்கள் மற்றும் மகளிர்க்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மாநிலம் முழுவதும், சீரான, பரவலான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உருவாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், மின்னணுவியல், மின் வாகனம் மற்றும் அது சார்ந்த துறைகளிலும், மின்னணுவியல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அத்துடன் ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டிலும், தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நிலையை மேலும் மேம்படுத்திடும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் பல்வேறு நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோசே எலக்ட்ரிக் நிறுவனம், பலமுனை இணைப்பிகள் (Multi pole connectors). கோஆக்சியல் இணைப்பிகள் (Coaxial Connectors) மற்றும் பிற மின்னணு உபகரணங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. ஹிரோசே எலக்ட்ரிக் சென்னை பிரைவேட் லிமிடெட், இந்நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
இந்நிறுவனம், 100 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் மின்சார / மின்னணு இணைப்பிகள் உற்பத்தி ஆலை அமைக்க முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்றைய தினம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.என தெரிவிக்கப்பட்டுள்ளது.