தமிழக செய்திகள்

‘அக்வான்’ புயலின் நகரும் வேகம் அதிகரிப்பு

அக்வான் புயலால் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களுக்கு நல்ல மழையை கொடுக்கும் என சொல்லப்பட்டது.

சென்னை,

வங்கக்கடலில் உருவான 'அக்வான்' புயல், தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) வடக்கு ஆந்திர பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையையொட்டி நரசாபூர்-பூரிக்கு இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை மையம் கணித்திருக்கிறது.

இந்த அக்வான் புயல், முதலில் வட தமிழகப் பகுதிகளை நோக்கி வந்து நல்ல மழையை கொடுக்கும் என்றே வானிலை ஆய்வாளர்கள் பலர் கணித்தனர். இந்த மழைதான் வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்துக்கு அதிலும் குறிப்பாக சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களுக்கு நல்ல மழையை கொடுக்கும் என சொல்லப்பட்டது.

அதற்கேற்ப கடல் சார்ந்த அலைவுகளும் சாதகமாக இருந்த நிலையில், அது அப்படியே நிலை மாறிப் போனது. வறண்ட காற்று, காற்று முறிவு போன்ற காரணிகளால் புயல் ஒரு அமைப்பே இல்லாமல் சிதறும் நிலைக்கு தள்ளப்பட்டது. காற்று முறிவு காரணமாக மழைக்கான மேகங்களை உரு வாக்க முடியாமல் திணறி வருகிறது. மேற்கத்திய தாழ்வு நிலை, புயலில் இருக்கக் கூடிய ஈரப்பதத்தை தன் பக்கம் இழுத்துக் கொண்டதால், தமிழகம் நோக்கி வர முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது.

வட தமிழக பகுதிகளில் முதலில் புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்த நிலையில், வானிலை ஆய்வு மையம் நெல்லூருக்கும், விசாகப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கும் என அறிவித்தது. அதன் பின்னர், தற்போது ஒடிசா அருகில் கரையைக் கடக்கும் என ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மொத்தத்தில் ஆந்திராவுக்கும் போகாமல், ஒடிசாவை நோக்கி பயணத்தை தொடங்கியிருக்கிறது. அதுவும் அங்குதான் கரையைக் கடக்குமா? அல்லது கடலிலேயே கரைந்துவிடுமா? என்பது இன்று தெரிந்துவிடும்.

இந்த நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள 'அக்வான்' புயல் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், தற்போது மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் நர்சாபூரில் இருந்து 440 கி.மீ.. ஒடிசாவின் பூரியில் இருந்து 590 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள புயல், நாளை நண்பகல் நர்சாபூர் -பூரி இடையே கோலாப்பூரையொட்டி கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

புயல் நாளை கரையைக் கடக்க உள்ள நிலையில், ஆந்திராவின் வட கடலோர மாவட்டங்களுக்கும் ஒடிசாவின் தெற்கு கடலோர மாவட்டங்களுக்கும் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கபட்டுள்ளது. ஆந்திரா, ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT