சென்னை,
தமிழகத்தில் தவெக அரசை விமர்சிக்கும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் பதிவுகள் கட்டுப்படுத்தப்படுவதாகவும், அவற்றின் பார்வைத்தன்மை குறைக்கப்படுவதாகவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தக் கோரி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்குக் கடிதம் எழுதியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் தவெக அரசை விமர்சிக்கும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் பதிவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, புகார் அளிக்கும் மற்றும் குறைதீர்க்கும் வழிமுறைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அரசை விமர்சிக்கும் கணக்குகள் மற்றும் பதிவுகள் மீண்டும் மீண்டும் கட்டுப்படுத்தப்படுவதுடன், நீக்கப்படுவதாகவும், அவற்றின் பார்வைத்தன்மை குறைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டபூர்வமான அரசியல் விமர்சனங்களுக்கு எதிராக மாநிலக் காவல்துறை இயந்திரமும், பிற மாநில வளங்களும் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து தீவிரமான கவலை எழுந்துள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
மாநில அதிகாரிகளின் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து ஆய்வு செய்யவும், இன்ஸ்டாகிராம் தளத்தைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்திடமிருந்து தகவல்களைக் கோரவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.