நெல்லை,
பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை தி.மு.க. எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 18-ந்தேதி தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், அவதூறாகவும் பேசினார் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை போலீசார் கடந்த 20-ந்தேதி கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மார்க்கண்டேயனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நெல்லை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி கோர்ட்டு கடந்த 22ம் தேதி தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி தூத்துக்குடி கோர்ட்டில் 2வது முறையாக மார்க்கண்டேயன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அந்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அவருக்கு கொடுக்கப்பட்ட நிபந்தனைகளின்படி, “இனிமேல் இதுபோன்று பேசமாட்டேன் என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும். தூத்துக்குடி காவல் நிலையத்தில் நாள்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சட்டமன்றம் நடைபெறும் நாளில் மட்டும் கையெழுத்திடுவதில் விலக்கு அளிக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி., பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேரில் சென்று, விரைவில் விடுதலையாக உள்ள மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வை சந்தித்து நலம் விசாரித்தார். இதற்கு முன்னர் கடந்த மாதம் ஜூலை 21-ந்தேதி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேரில் சென்று மார்க்கண்டேயனை கனிமொழி சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.