நீலகிரி,
நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புற வளர்ச்சி மற்றும் பழங்குடியினரின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக, நாடாளுமன்ற மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்களை கொண்ட 17 பேர் கொண்ட நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக் குழுவினர் ஊட்டிக்கு வருகை தந்தனர்.
நாடாளுமன்ற நிலை குழு தலைவர் சப்தகிரி சங்கர் உலகா தலைமையில் குழுவினர் ஊட்டியில் இருந்து மலை ரெயில் மூலம் குன்னூருக்கு வந்தனர். இந்த குழுவில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா எம்.பி. உள்ளார். அவரும் மலை ரெயிலில் பயணம் செய்தார்.
குன்னூர் ரெயில் நிலையத்தில் நாடாளுமன்ற குழுவினரை நீலகிரி கூடுதல் கலெக்டர் அபிலாஷா கவுர், குன்னூர் சப்-கலெக்டர் கன்சன் சவுத்ரி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் குழுவினர் அங்கிருந்து தனி வாகனங்கள் மூலம் குன்னூர் அருகேயுள்ள பல்வேறு பழங்குடியின கிராமங்களுக்கு சென்று, அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம், அடிப்படை வசதிகள் மற்றும் கிராமப்புற வளர்ச்சி திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.