தமிழக செய்திகள்

முகூர்த்த தினம்.. 100-க்கும் மேற்பட்ட திருமணம்.. களைகட்டிய திருச்செந்தூர் கோவில்

கோவில் வளாகத்தில் மணக்கோலத்தில் மணமக்கள் அதிகளவில் தென்பட்டனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவிழா, விடுமுறை, பண்டிகை மற்றும் சுபமுகூர்த்தம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் பக்தர்கள் வருவது வழக்கம்.

கோவிலில் அதிகாலை 4 மணிக்கு வழக்கம்போல் கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தது. அதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. சுபமுகூர்த்த தினங்களில் திருச்செந்தூர் கோவிலில் வைத்து திருமணம் செய்வதில் பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று மார்கழி மாத வளர்பிறை சுபமுகூர்த்த தினம் என்பதால் ஏராளமான மணமக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்திருந்தனர். சண்முக விலாச மண்டபம் மற்றும் கோவில் வளாகங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இதனால் கோவில் வளாகத்தில் மணக்கோலத்தில் மணமக்கள் அதிகளவில் தென்பட்டனர்.