தமிழக செய்திகள்

முல்லைப் பெரியார் அணையின் மட்டத்தை 152அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்-ஓ.பன்னீர்செல்வம்

முல்லைப் பெரியார் அணையின் மட்டத்தை 152அடியாக உயர்த்த கேரள அரசுடன் இணைந்து அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்து பெய்ததால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.80 அடியாக உயர்ந்துள்ளது.வைகை அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் பொருட்டு 1400 கன அடி நீர் பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்பட்டது. இதனால் பல நாட்களாக 25 அடிக்கும் கீழ் இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 43.24 அடியாக உயர்ந்துள்ளது.

தண்ணீர் திறப்பு தாமதமாகிக்கொண்டே போவதால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். பொதுப்பணித்துறையினர் அணையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தனர்.

தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தமிழக அரசுக்கு தண்ணீர் திறக்க பரிந்துரை செய்தார். அதை தொடர்ந்து இன்று 25-ந் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று வனதுர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. அணையில் இருந்து தண்ணீரை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் திறந்து வைத்தனர். அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர். தண்ணீர் வரும்போது மலர் தூவி விவசாயிகள் வழிபட்டனர்.

இன்று முதல் வினாடிக்கு 200 கன அடி நீர் வீதம் 120 நாட்களுக்கு திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. மழை இல்லாமல் அணையின் நீர் மட்டம் குறைந்தால் முறைபாசனம் நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்து பயன்பெறலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய ஓ. பன்னீர் செல்வம் கூறும் போது "மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவுப்படி முல்லைப் பெரியார் அணையின் மட்டத்தை 152அடியாக உயர்த்த கேரள அரசுடன் இணைந்து அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக பேபி அணையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் " என்றார்.