தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய பாசன நீர் ஆதாரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்கி வருகிறது. அணையின் மொத்த உயரம் 152 அடி. இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அணையின் தண்ணீரை பயன்படுத்தி தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது 2-ம் போக நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழை பெய்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருந்தது. கடந்த 5-ந்தேதி அணையின் நீர்மட்டம் 111.50 அடியாகவும், வினாடிக்கு 173 கனஅடி நீர்வரத்தாகவும் இருந்தது.
இந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 110.95 அடியாக குறைந்துள்ளது. மேலும் நீர்வரத்து வினாடிக்கு 75 கனஅடியாக குறைந்துள்ளது. அதேசமயம், அணையிலிருந்து வினாடிக்கு 256 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் தற்போது 1062 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.