தமிழக செய்திகள்

சென்னையில் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள்: வட்டார துணை ஆணையாளர்கள் நேரில் ஆய்வு

உணவகத்தில் பெருமளவு உருவாகும் கழிவுகளை முறையாக தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை,

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகளை வட்டார துணை ஆணையாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

வட்டார துணை ஆணையாளர்கள்

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகளை வட்டார துணை ஆணையாளர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன், பெருநகர சென்னை மாநகராட்சி, வார்டு-54க்குட்பட்ட சரவணத் தெருவில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள் மற்றும் தேவையற்ற பொருட்களை அகற்றும் பணி, வெங்கராம ஐயர் தெருவில், நடைபெற்று வரும் தூய்மைப் பணி, அப்பகுதியில் உள்ள இலவச ஒப்பனை அறை, சரவணன் தெருவில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை பணி, வார்டு-58க்குட்பட்ட பெரியமேடு, பி.எச். சாலையில் அமைந்துள்ள பழைய மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணி, வார்டு-59க்குட்பட்ட மவுண்ட் சாலை, ராம்கி குழுவினருடன் இணைந்து, காஸ்மோபாலிட்டன் கிளப் மற்றும் உணவகத்தில் பெருமளவு உருவாகும் கழிவுகளை முறையாக தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வு

மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கௌஷிக், பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-125க்குட்பட்ட, லூப் சாலையில் உள்ள நவீன மீன் அங்காடியின் மேம்பாட்டுப் பணி அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல், பெருநகர சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், வார்டு-188க்குட்பட்ட ராம் நகர், 8ஆவது குறுக்குத் தெருவில் நடைபெற்று வரும் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையம் கட்டடப் பணி, வேளச்சேரி பாலத்திற்கு கீழ் உள்ள கட்டிடக் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக, வார்டு-189க்குட்பட்ட ம.பொ.சி.நகர் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் கட்டடப் பணி, வார்டு-191க்குட்பட்ட பகுதிகளில் வீடுகள் தோறும் பெறப்படும் குப்பைகளை முறையாக தரம் பிரித்து பெறப்படும் பணி, ஜெயச்சந்திரன் டெக்டைல்ஸ் அங்காடியில் பெறப்படும் பெருமளவுக் கழிவுகளை (BWG) முறையாக தரம் பிரித்து பெறப்படுவதைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, நடைபெற்று வரும் கட்டடப்பணி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடித்திடவும், அன்றாடப் பெறப்படும் குப்பைகளை முறையாக தரம் பிரித்து வழங்கிடவும், கட்டடக் கழிவுகளை உடனடியாக அகற்றிடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT