தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 8 கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ பனைக்குளம் பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த யோவான் அற்புதராஜ் (வயது 35) என்பவரை முன்விரோதம் காரணமாக கீழபனைக்குளம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை(65) என்பவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவம், நேற்று செல்லத்துரை என்பவரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த சாத்தான்குளம் உட்கோட்ட டி.எஸ்.பி. ஆவுடையப்பன், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் கேப்ரியல் ராஜ், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் ராஜேந்திரன் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 8 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT