மதுரை,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இந்த சம்பவத்தின்போது மானாமதுரை டி.எஸ்.பி.யாக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், போலீஸ்காரர் இளையராஜா ஆகியோருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு மதுரை மாவட்ட 5-வது கூடுதல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மானாமதுரை சரக டி.எஸ்.பி. சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய மதுரை மாவட்ட 5-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி தாமோதரன் உத்தரவிட்டார்.
நீதிபதி உத்தரவிட்ட நிலையில் டி.எஸ்.பி., ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், காவலர் ஆகிய 4 பேரும் நீதிமன்றத்தில் அமரவைக்கப்பட்டனர். சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையின்படி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.