தமிழக செய்திகள்

விளாத்திகுளம் அருகே 12-ம் வகுப்பு மாணவி கொலை: கைதானவர் மதுரை சிறைக்கு மாற்றம்

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மாணவி கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த 10-ந் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றார். மீண்டும் அந்த மாணவி வீடு திரும்பவில்லை. 11-ந் தேதி அந்த கிராமத்துக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளியை கைது செய்யும் வரை மாணவியின் உடலை வாங்கமாட்டோம் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அறிவியல் ரீதியாக டி.என்.ஏ. பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதன் பலனாக 9 நாட்களுக்கு பிறகு துப்பு துலங்கியது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முனியசாமி மகன் மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (வயது 37) என்பவர்தான் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. பிரபல ரவுடியான இவருக்கு, கீழஈராலில் நடந்த மூதாட்டி கொலை வழக்கில் தூத்துக்குடி மகிளா கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 18-ந் தேதி ஜாமீன் பெற்றுள்ளார். கோர்ட்டு உத்தரவுப்படி டிசம்பர் 24-ந் தேதி முதல் தூத்துக்குடி மகிளா கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்தார். இதற்காக அவர் சாயல்குடியில் இருந்து மாணவியின் சொந்த ஊர் வழியாக தூத்துக்குடிக்கு வந்து உள்ளார். அவ்வாறு வந்து செல்லும்போது, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

போலீசார் நேற்று முன்தினம் தர்ம முனீஸ்வரனை மடக்கி பிடித்து கைது செய்தனர். இதையறிந்த கிராம மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர். தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் உள்ள தர்ம முனீஸ்வரனின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சரமாரி அடித்து உடைத்து சூறையாடினர். இதற்கிடையே தர்ம முனீஸ்வரனை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்திய நிலையில் நள்ளிரவில் திடீரென அவருக்கு வயிறுவலி ஏற்பட்டதாக தெரிகிறது.

உடனே அவர் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்ததும் தர்ம முனீஸ்வரனை தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் உள்ள அவரது வீடு, குறுக்குச்சாலை, விளாத்திகுளம், எட்டயபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்பிறகு அவர் தூத்துக்குடி போக்சோ கோர்ட்டில் நீதிபதி பிரீத்தா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை 14 நாட்கள் காவலில் வைக்கவும், அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். பின்னர் தர்மமுனீஸ்வரனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்து சென்று அடைத்தனர்.

இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தநிலையில் பாதுகாப்பு, நிர்வாக காரணங்களுக்காக மதுரை சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.