தமிழக செய்திகள்

ஊர்க்காவல் படை வீரர் படுகொலை: மதுவிலக்கு வாக்குறுதி எங்கே? - வேல்முருகன் கேள்வி

விற்பனையை அதிகரிப்பதில் அரசு அதிக கவனம் செலுத்துவது ஏன்? என வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

ஏற்கனவே மனைவியை இழந்த ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன், தற்போது தனது இரண்டு குழந்தைகளையும் துயரத்தில் தவிக்கவிட்டு உயிரிழந்துள்ளார். எனவே, அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தி உள்ளார்.

ஊர்க்காவல் படை வீரர் மீது தாக்குதல்

இது தொடர்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

அரியலூர் மாவட்டம், தளவாய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பொது இடத்தில் மது அருந்தியதைத் தட்டிக் கேட்டபோது, பணியில் இருந்த ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்புக்காகப் பணியாற்றிய ஒருவரே, மதுபோதையில் இருந்தவர்களின் வன்முறைக்கு பலியாகியிருப்பது, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் இருப்பவர்களின் பாதுகாப்பை அரசு எவ்வாறு உறுதி செய்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.

இந்தக் கொடூரச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், வழக்கு விரைவாக விசாரிக்கப்பட்டு உரிய தண்டனை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

ரூ.1 கோடி வழங்க வேண்டும்

ஏற்கனவே மனைவியை இழந்த வெங்கடேசன், தற்போது தனது இரண்டு குழந்தைகளையும் துயரத்தில் தவிக்கவிட்டு உயிரிழந்துள்ளார். எனவே, அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குழந்தைகளின் எதிர்காலம் இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்படக் கூடாது.

அவர்களின் பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி நிறைவு பெறும் வரையிலான அனைத்து செலவுகளையும் அரசே முழுமையாக ஏற்க வேண்டும். கல்விக் காலம் முழுவதும் அவர்களின் பாதுகாப்பு, தங்குமிடம் மற்றும் தேவையான ஆதரவை அரசு உறுதி செய்ய வேண்டும்.

மேலும், கல்வியை நிறைவு செய்த பின்னர், அவர்களின் தகுதிக்கு ஏற்ப, நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு அரசுப் பணியில் சேருவதற்கான உரிய வாய்ப்பை அரசு வழங்க வேண்டும்.

கடமையில் உயிரிழந்த ஒரு ஊர்க்காவல் படை வீரரின் குடும்பத்தைப் பாதுகாப்பது அரசின் மனிதநேயக் கடமை மட்டுமல்ல. அரசின் பொறுப்பும் ஆகும்.

மதுபானக் கடைகளை மூட வேண்டும்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நீண்ட காலமாக மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி வருவதுடன், பல்வேறு இடங்களில் மதுவுக்கு எதிராகவும், மதுக்கடைகளுக்கு எதிராகவும் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளது.

தேர்தலுக்கு முன்பு மதுவிலக்கு குறித்து அளித்த வாக்குறுதிகளுக்கும், ஆட்சிக்கு வந்த பிறகு புதிது புதிதாக மதுபானங்களை அறிமுகப்படுத்தி, அவற்றின் விற்பனையை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கும் இடையே உள்ள முரண்பாட்டிற்காக, ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் செய்திகள் தொடர்ந்து வெளியாகின்றன. அவ்வப்போது கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் நடைபெற்றாலும், போதைப்பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாகத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டியுள்ளது. மது பயன்பாட்டைக் கட்டுப்படுத்தாமல் போதைப் பொருட்களின் தீமையை மட்டும் கட்டுப்படுத்த முடியாது. இரண்டின் சமூகப் பாதிப்புகளையும் அரசு ஒருங்கிணைந்த கொள்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்.

அணுகுமுறையை மாற்ற வேண்டும்

மது மற்றும் போதைப்பொருட்களால் உருவாகும் வன்முறை, குடும்பச் சீரழிவு, இளைஞர்களின் எதிர்காலப் பாதிப்பு ஆகியவற்றைத் தடுக்க அரசு தனது அணுகுமுறையை உரிய முறையில் மாற்ற வேண்டும்.

எனவே, வெங்கடேசனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதுடன், அவரது குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை அரசு முழுமையாகப் பாதுகாக்க வேண்டும். பணியில் இருக்கும் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினரின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

மதுவின் சமூகத் தீமையைக் கட்டுப்படுத்தவும், போதைப்பொருட்களின் புழக்கத்தை வேரறுக்கவும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவரது இரண்டு குழந்தைகளுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT