கரூர்,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கரூர் மாவட்டம், சாலைப்பட்டி கிராமத்தில் தனியாக வாழ்ந்து வந்த தாயார் அம்மாள் என்பவரின் கை, கால்களைக் கட்டி படுகொலை செய்த மர்ம ஆட்கள், அவர் அணிந்திருந்த தோடு, மூக்குத்தி ஆகிய நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நகைக்காக மூதாட்டியைக் கூட இரக்கமின்றி படுகொலை செய்யும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பது கண்டிக்கத்தக்கது.
நகைக்காக மூதாட்டியை கொடூரமாக கொலை செய்தவர் ஒருவரா அல்லது ஒரு கும்பலா? என்பது இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக வெள்ளியணை காவல்நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் போதிலும் எந்தத் துப்பும் துலங்கவில்லை. இதனால் கரூர் மாவட்டத்தில் தனியாக வாழ்ந்து வரும் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவி வருகிறது. இந்த ஒற்றைக் காரணத்திற்காகத் தான் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் திமுகவை மக்கள் தண்டித்துள்ளனர். ஆனால், மழை விட்டும் தூவானம் விடாத கதையாக திமுக ஆட்சியை அகற்றுவதற்கான தீர்ப்பு எழுதப்பட்ட பிறகும், திமுக ஆட்சியின் தீமைகளான கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், போதை அட்டகாசம் ஆகியவை தொடர்கின்றன.
சாலைப்பட்டி கிராமத்தில் மூதாட்டியை படுகொலை செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொலையாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சியின் எஞ்சியிருக்கும் ஒரு வாரத்திலாவது கொலை, கொள்ளைகள் நடக்காமல் மக்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழ்வதை அரசும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.