தமிழக செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர் கொலை: மனைவி, கள்ளக்காதலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

இந்த சம்பவம் தொடர்பாக தனியார் நிறுவன ஊழியரின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர்,

நீலகிரி மாவட்டம் தேவர்சோலை கிராமத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜசேகர் (வயது 32). இவருடைய மனைவி இந்து சன்னி (33). இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்தம் அக்ரஹாரம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தனர். கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி ஜஸ்டின் ராஜசேகர் மாயமானார்.

ஆனால் அவரது வீட்டில் ரத்த கரை படிந்திருந்தது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் மத்திகிரி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் இந்து சன்னியிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்து சன்னி மத்தம் அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலர் கோபு முன்னிலையில் சரண் அடைந்தார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலன் லிண்டோ (38) உதவியுடன் தனது கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை மத்திகிரி கூட்டு ரோடு அருகில் உள்ள சுடுகாட்டில் புதைத்து விட்டதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஜஸ்டின் ராஜசேகர் உடலை போலீசார் தோண்டி எடுத்தனர். மேலும் இது தொடர்பாக இந்து சன்னி, அவரது கள்ளக்காதலன் லிண்டோ ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ் நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட இந்து சன்னி, அவரது கள்ளக்காதலன் லிண்டோ ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், குற்றத்தை மறைத்ததற்காக 5 ஆண்டு சிறையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சின்னபில்லப்பா ஆஜர் ஆனார்.