திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே கொலை வழக்கில் 2 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்பட 4 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு, சீனியாபுரத்தைச் சேர்ந்த பழனிகுமார்(எ) துரைபாண்டி (வயது 60) என்பவரை நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில் ராஜகுத்தாலபேரியை சேர்ந்த மணிகண்டன்(46), பத்தன்மேடு பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி உதயகாந்த்(38), சரித்திர பதிவேடு குற்றவாளி வேல்துரை(எ) பார்த்திபன்(32) மற்றும் அரிக்கேசவநல்லூர் பகுதியைச் சேர்ந்த கோபு(49) ஆகிய 4 பேரும் சேர்ந்து கொலை செய்தனர். இது தொடர்பாக வீரவநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி புலன் விசாரணை மேற்கொண்டு மேற்சொன்ன நபர்களை கைது செய்தார்.
புலன் விசாரணை முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மேற்சொன்ன நபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு நீதிபதி செல்வம் குற்றவாளிகள் 4 பேருக்கும் தண்டனை வழங்கினார்.
IPC 302-ன்படி ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 ஆயிரம் அபராதம், IPC 506(i)-ன்படி 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம், IPC 449-ன்படி 9 ஆண்டுகள் சிறை தவிடனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்சொன்ன தண்டனைகளை குற்றவாளிகள் ஏககாலத்தில் (Concurrent) அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் திரும்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ, வீரவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன், இந்த வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி (தற்போது தூத்துக்குடி மாவட்டம்), வழக்கின் விசாரணைக்கு உதவி செய்த நீதிமன்ற காவலர் விக்னேஷ் ஆதிமூலம் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் மகேஷ் ஆயியோரை மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா. சாஸ்திரி பாராட்டினார்.
2006-ம் ஆண்டில் இதுவரை 7 கொலை வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு 16 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் 8 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்பட 15 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டளை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.