சென்னை,
அலட்சியத்தால் தொடரும் கொலைகள், போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு, தள்ளாடும் காவல்துறை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:-
சில நாட்களுக்கு முன்புதான், திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்து போட்டுவிட்டு வந்தவர் மனைவி முன்பே கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அப்போதே, "ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா?" என நான் கேள்வி எழுப்பியிருந்தேன். அப்படி உருப்படியான எதுவும் செய்யப்படுவதில்லை என சிவகங்கையில் நேற்று நடந்துள்ள மற்றுமொரு கொலை சம்பவம் காட்டியுள்ளது.
கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த மதன் எனும் ரவுடி ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். முழுக்க முழுக்க காவல்துறையின் அலட்சியத்தால் நடந்துள்ள கொலை இது.
பெருந்துறை அருகே செவிலியர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 5 நாட்களுக்குப் பின்புதான் அவரது சடலத்தையே கண்டறிந்திருக்கிறார்கள். நடப்பது நம் ஆட்சிதானே என நினைத்து த.வெ.க. நிர்வாகிகளின் போதை பொருள் கடத்தலும் கொடிகட்டி பறக்கிறது.
வேதாரண்யத்தில் த.வெ.க. ஒன்றிய செயலாளர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இப்போது, அதே மாவட்டத்தில் உலகத்துக்கே மெத் தயாரித்து விற்பனை செய்யும் மையமாக தமிழ்நாட்டை மாற்ற முயன்ற த.வெ.க. நிர்வாகி 'மெத்' பூபாலனும் கைதாகியுள்ளார்.
முதல்-அமைச்சரின் திரைப்படங்களை பார்த்து இதைத்தான் அவரது கட்சிக்காரர்கள் கற்றுக்கொள்கிறார்களா? மாநில காவல்துறையினரால் இவர்களை பிடிக்க முடியவில்லையா அல்லது ஆளும்கட்சி நபர் என்பதால் இத்தனை நாள் கண்டும் காணாமல் விட்டனரா?
போதை மருந்துகளை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், முதலில் தன் கட்சியினரை முதl-அமைச்சர் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அதற்கு, காவல்துறை முதலில் அவரது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன?
துறைக்கு பெயரளவில் மட்டுமே முதல்-அமைச்சர் பொறுப்பு வகிக்கிறார். தன்னிடமுள்ள பல துறைகளின் பொறுப்புகளை மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து கொடுத்ததை போல, காவல்துறையையும் வெளிக்கொள்முதல் (outsource) செய்துவிட்டாரா?
காவல்துறையில் அவர் உரிய கவனம் செலுத்துவதில்லை என்பதைத்தான் நிற்காமல் தொடரும் அரிவாள்வெட்டுகளும், மத்திய அரசின் விசாரணை அமைப்புகளிடம் பிடிபடும் போதைக்கடத்தல்களும் காண்பிக்கின்றன. முதல்-அமைச்சர் அவர்களே, உங்கள் அலட்சியம் உயிர்களை பறிக்கிறது. போதையை விடு, விளையாட்டை எடு என்று சொன்ன நீங்கள் முதலில் ஓய்வெடுப்பதை விட்டுவிட்டு, உங்கள் துறையைக் கையில் எடுங்கள்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.