சென்னை,
தவெக தலைவரும், நடிகருமான விஜய் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் நேற்று மாலை இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று அதிகாலையில் 3 மணிநேரம் கொண்ட முழு படமும் இணையத்தில் வெளியானது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
'ஜனநாயகன்' படம் இணையத்தில் வெளியானதற்கு திரைப்பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இணையத்தில் கசிந்த காட்சிகளில், "வெடிகுண்டு செய்து ஊர் திருவிழாவில் பொது மக்கள் கூடும் இடத்தில் முஸ்லிம் குண்டு வைப்பது போல் காட்சி வருகிறது. தேர்தல் நேரத்தில் முஸ்லிம் வெறுப்பு பிரசாரம் செய்யும் நடிகர் விஜய்யை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்" என்று இந்திய தேசிய லீக் கட்சி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. அந்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:-
நேற்றிலிருந்து ஜோசப் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட முன்னோட்டம் என சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த முன்னோட்ட காட்சியில் வெடிகுண்டு செய்து ஊர் திருவிழாவில் பொது மக்கள் கூடும் இடத்தில் முஸ்லிம் குண்டு வைப்பது போல் காட்சி வருகிறது.
ஏற்கனவே துப்பாக்கி, பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து உள்ளார் ஜோசப் விஜய். ஜனநாயகன் திரைப்படம் வெளியாக இன்னும் சென்சார் போர்டு அனுமதி கொடுக்கவில்லை. இருந்தும் தேர்தல் நேரத்தில் முஸ்லிம் வெறுப்பு பிரசாரம் செய்து தேர்தலை நிறுத்தவோ அல்லது வன்முறை நடத்தவோ ஜோசப் விஜய்யும், இப்படத்தினை இயக்கிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் முயற்சி செய்வதாக தோன்றுகிறது.
ஆகவே நடிகர் ஜோசப் விஜய் மற்றும், இயக்குநர் எச். வினோத், கே.வி.என் புரொடக்சன்ஸ் உரிமையாளர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என மதிப்பிற்குரிய மாநகர காவல் ஆணையரை இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.