காணியம்மன் திருக்கல்யாண வைபவம் 
தமிழக செய்திகள்

காணியம்மன் கோவில் விழாவில் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடத்திய இஸ்லாமியர்: நெகிழ்ச்சி சம்பவம்

இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்து வணங்குவது தலைமுறை தலைமுறையாக தொடரும் ஒரு உன்னத வழக்கமாகும்.

தருமபுரி,

சாதி, மத பேதங்களை கடந்து மனிதநேயமே முதன்மையானது என்பதை நிரூபிக்கும் வகையில், இருளப்பட்டியில் நடைபெற்ற காணியம்மன் திருக்கல்யாண விழா பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நூறாண்டு கால பாரம்பரியமாக இஸ்லாமிய குடும்பத்தினர் அம்மனுக்கு திருக்கல்யாணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

நூற்றாண்டு கால பாரம்பரியம்

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு காணியம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான காணியம்மன் திருக்கல்யாணத்தின் போது, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிப்பது (மாங்கல்யதாரணம்) தலைமுறை தலைமுறையாக தொடரும் ஒரு உன்னத வழக்கமாகும்.

பக்தர்கள் பரவசம்

இந்த (2026) ஆண்டும் விழாவையொட்டி காணியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில், வழக்கம்போல ஆம்பூரைச் சேர்ந்த இஸ்லாமிய குடும்பத்தினர் சீர்வரிசையுடன் வந்து, பாரம்பரிய முறைப்படி அம்மனுக்கு திருமாங்கல்யத்தை அணிவித்து திருமண சடங்கினை முன்னின்று நடத்தினர். இதில் திரளான இந்து மற்றும் இஸ்லாமிய பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

மத நல்லிணக்கத்தின் அடையாளம்

சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மத்தியில் இந்த நிகழ்வு மத நல்லிணக்கத்திற்கு மிகச்சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது. வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் நமது பண்பாட்டை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அமைந்துள்ள இந்த திருவிழா, சமூக வலைதளங்களிலும் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.