சென்னை,
தேசப்பற்றையும், தெய்வீகத்தையும் வாழ்வின் இரு கண்களாகக் கொண்டவர் முத்துராமலிங்க தேவர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது :-
தேசப்பற்றையும், தெய்வீகத்தையும் வாழ்வின் இரு கண்களாகக் கொண்டு, தியாகத்தையும் நேர்மையையும் தனது வாழ்வியல் நெறியாகக் கொண்ட போற்றுதலுக்குரிய தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை பெருநாளில், அவருடைய பெரும் வாழ்வையும் புகழையும் போற்றி வணங்குகிறேன்.
தேவர்ஜெயந்தி மற்றும் குருபூஜை பெருநிகழ்வினை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் புண்ணிய மண்ணில் அமைந்துள்ள தெய்வத் திருமகனாரின் திருக்கோவிலுக்கு சென்று,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அம்மாவால் வழங்கப்பட்ட 13.5 கிலோ தங்கக் கவசத்தால் தரிக்கப்பட்ட அவர்தம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினேன். “மனிதனை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என ஒழுக்கத்தின் அடிப்படையில் மதிக்க வேண்டுமே தவிர, வேறு எந்த அடிப்படையிலும் அல்ல” என்ற அவரது உயரிய சிந்தனை என்றும் மனிதகுலத்திற்கு வழிகாட்டட்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.