தண்ணீர் தொட்டியில் போலீசார் ஆய்வு 
தமிழக செய்திகள்

சேலம் அரிசிபாளையத்தில் தண்ணீர் தொட்டியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண் சடலம் மீட்பு

மூட்டையைப் பிரித்து சோதித்தபோது, அதற்குள் ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் அழுகிய நிலையில் இருந்தன.

சேலம்,

சேலம் மாநகரப் பகுதியான அரிசிபாளையத்தில், பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு, தண்ணீர் தொட்டிக்குள் வீசப்பட்டார்.

துர்நாற்றத்தால் அம்பலமான கொடூரம்

சேலம் மாவட்டம் அரிசிபாளையம், மெயின் ரோடு பகுதியில் பூசாரி ஒருவரின் வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டின் மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டியிலிருந்து கடந்த சில நாட்களாக கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், இன்று (திங்கட்கிழமை) தண்ணீர் தொட்டியைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது அதற்குள் ஒரு மூட்டை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மூட்டையில் இருந்த உடல் பாகங்கள்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலம் மாநகர போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள், தண்ணீர் தொட்டிக்குள் இருந்த மூட்டையை வெளியே எடுத்தனர். அந்த மூட்டையைப் பிரித்து சோதித்தபோது, அதற்குள் ஒரு பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் அழுகிய நிலையில் இருந்தன.

போலீசார் தீவிர விசாரணை

கொலை செய்யப்பட்டு பல நாட்கள் ஆகியிருக்கலாம் என்பதால் சடலம் முற்றிலும் சிதைந்த நிலையில் இருந்தது. போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இக்கொடூர கொலை தொடர்பாக சேலம் மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது குறித்தும், கடந்த சில நாட்களில் சேலம் மாவட்டத்தில் மாயமான பெண்களின் பட்டியல் குறித்தும் முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது.

கொலையாளி யார்? என்பதை அறிய அந்த வீட்டின் மாடிக்கு வந்து சென்றவர்கள் யார், அங்கு தங்கியிருந்தவர்கள் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் பணிகளும் தீவிரமாக தொடங்கப்பட்டன.

அரிசிபாளையத்தின் குடியிருப்புப் பகுதியில், பெண்ணை மிகக் கொடூரமான முறையில் துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசிச் சென்ற சம்பவம் சேலம் மக்களிடையே அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.