இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சிவகாசி ரெயில் நிலையத்தில், ரெயில் நிலைய பெயர் பலகையில் தமிழ் மொழியில் முதலில் ரெயில் நிலையப் பெயரை எழுதுவதற்குப் பதிலாக, இந்தியில் எழுதப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் தான் முதலில் பெயரை எழுத வேண்டும். அதற்கு அடுத்து கீழாகத் தான் ஆங்கிலத்திலும், இந்தியிலும் பெயர்களை இடம் பெறச் செய்ய வேண்டும். இந்தியில் பெயரை முதலில் இடம் பெறச் செய்து, தமிழை இரண்டாம் நிலைக்கு தள்ளுவது என்பது மறைமுகமான இந்தித் திணிப்பு முயற்சியாகும்.
இது மத்திய அரசின் ஆட்சி மொழி சட்ட அடிப்படையில் 1977-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைக்கு எதிரானதாகும். அந்த அரசாணைப்படி மாநில மொழிகள் தான் அந்தந்த மாநிலங்களில் முதலில் இடம் பெற வேண்டும். இது ரெயில்வே துறைக்கும் பொருந்தும். மத்திய அரசின் முந்தைய அரசாணைக்கு எதிராக, இன்றைய பா.ஜ.க. அரசு, இந்தித் திணிப்பு முயற்சிகளை மேற்கொள்வதை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய இந்தித் திணிப்பு முயற்சியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.