சென்னை,
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீனிவாசபுரம் திட்டப்பகுதி-1ல், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் தலைமையில், 26.10.2026 அன்று 137 பயனாளிகளுக்கான குடியிருப்பு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 137 பயனாளிகளுக்கு குடியிருப்பு (கதவு ) எண் வழங்கி தெரிவிக்கையில், டூம்மிங்குப்பம் மற்றும் செல்வராஜபுரம் திட்டப்பகுதிகளில் வசித்து வந்த ஆக்கிரமிப்புதாரர்களில் 147 பயனாளிகளுக்கு பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவின் (EWS) கீழ் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பயனாளியும் பங்களிப்பு தொகையாக ரூ.6.91 லட்சம் செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 137 பயனாளிகள் தலா ரூ.1.50 லட்சம் வீதம் முதல் தவணை தொகையை செலுத்தியுள்ளனர். மீதமுள்ள ரூ.5.41 லட்சத்தை வங்கிக் கடன் மூலம் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, பயனாளிகள் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்படும் குடியிருப்பின் கதவு எண்ணை பெற்று, வங்கி கடன் பெறுவதற்கு ஏதுவாகவும், குடியிருப்பு ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும், 137 பயனாளிகளுக்கான குடியிருப்பு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதேவேளையில், ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருபுக்களில் பயனாளிகள் மட்டுமே வசிக்க வேண்டும், எக்காரணம் கொண்டும் வாடகைக்கு விடவோ அல்லது பிற நபர்களுக்கு விற்பனை செய்யவோ கூடாது. மேலும், குடியிருப்புகளின் உட்புறம் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாகவும் சுகாதாரமான முறையிலும் பராமரித்து, பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், வாரிய கண்காணிப்புப் பொறியாளர் பி.வீரவாஞ்சிநாதன் மற்றும் வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.