தமிழக செய்திகள்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை

தூத்துக்குடியில் உள்ள என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் தனியார் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்த ஒருவர் வழக்கம்போல் கடந்த 10ம் தேதி இரவு பணிக்குச் சென்றுள்ளார்.

தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த ஜெயசுப்பிரமணியன் மகன் சரவணன் (வயது 36), தூத்துக்குடியில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் தனியார் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல் கடந்த 10ம் தேதி இரவு சரவணன் பணிக்குச் சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் காலை பணி நேரம் முடிந்தவுடன் சக ஊழியர்கள் அவரைத் தேடியுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு கட்டடத்தின் அருகே சரவணன் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சரவணன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அவரது இறப்புக்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.