தூத்துக்குடி,
சங்கரலிங்கபுரம் அருகே மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்த நபர், விவசாய நிலத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் பள்ளிவாசல்பட்டி சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம் (45). இவருக்குத் திருமணமாகி 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். கடுமையான குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், இவருடைய மனைவி மற்றும் பிள்ளைகள் கடந்த 15 ஆண்டுகளாக இவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் மாரிச்செல்வம் தனது பெற்றோர் வீட்டில் வசித்துக்கொண்டு, கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் வீட்டை விட்டு வெளியே சென்ற மாரிச்செல்வம், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இதற்கிடையே, மேலக்கல்லூரணி அருகே உள்ள இமானுவேல் என்பவருக்கு சொந்தமான புன்செய் நிலத்தில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதியினர் சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அங்கு இறந்து கிடந்தது மாரிச்செல்வம் என்பது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மரணத்திற்கான காரணம் குறித்து சங்கரலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.