தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள நட்டாத்தி, எள்ளன்விளை பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மகள் முருகேஸ்வரி (வயது 22). இவர் தூத்துக்குடியில் உள்ள நர்சிங் ஹோமில் பி.எஸ்சி. நர்சிங் முடித்துவிட்டு, அதே மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு தனது மருத்துவமனை பணியை முடித்துவிட்டு முருகேஸ்வரி வீட்டிற்குத் திரும்பியுள்ளார். இரவு உணவருந்திவிட்டு உறங்கச் சென்ற அவர், இன்று காலை வெகுநேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாயார் உள்ளே சென்று பார்த்தபோது, முருகேஸ்வரி சுயநினைவின்றி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக சாயர்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், முருகேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து, உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.