தமிழக செய்திகள்

விஜய் வருகையின்போது கோவை விமான நிலையத்தில் விழுந்து கிடந்த மர்ம ‘டிரோன்’ - தீவிர விசாரணை

டிரோன் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை,

கடந்த 30-ந் தேதி மற்றும் நேற்று தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொள்ள செல்வதற்காக முதல்-அமைச்சர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு வந்தார்.இதன் காரணமாக பாதுகாப்பு கருதி விமான நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகள் 'ரெட் ஜோன்' ஆக அறிவிக்கப்பட்டது. இந்த பகுதியில் டிரோன் பறக்க தடை செய்து மாவட்ட நிர்வாகமும், மாநகர காவல்துறையும் அறிவித்தது.

அத்துடன் தடையை மீறி டிரோன் பறக்க விடப்படுகிறதா? என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கோவை விமான நிலையத்தின் பின்புறத்தில் ஒரு டிரோன் விழுந்து கிடந்தது. அதை பறக்கவிட்டவர் யார்? என்று தெரியவில்லை. அதை பார்த்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அந்த டிரோனை சோதனை செய்தனர். அதில் கேமராக்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அத்துடன் அந்த டிரோன் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் கூறும்போது, அந்த டிரோன் சீனாவில் தயாரிக்கப்பட்டது ஆகும். டிரோன் பறக்க தடை இருக்கும்போது அதை பறக்கவிட்டவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

SCROLL FOR NEXT