தூத்துக்குடி,
தூத்துக்குடியில் தெருக்களில் சுற்றித்திரியும் பூனைகளை மர்ம கும்பல் வேட்டையாடி வருகிறது. அந்த பூனைகளை ஓட்டல்கள், சாலையோர கடைகளில் இறைச்சிக்காக பிடித்து செல்கிறார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு நிலவியது.
தூத்துக்குடியில் வீடுகள், திறந்தவெளி பகுதியில் நாட்டு பூனைகள் அதிகமாக உள்ளன. பூனைகளை பலர் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். அதே நேரத்தில் வெளியிலும் ஏராளமான பூனைகள் சுற்றித்திரிகின்றன. மீன்விற்பனை கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் பூனைகள் அதிகமாக உள்ளன.
இந்த பூனைகளை சமீபகாலமாக மர்மகும்பல் பிடித்து செல்வதாக புகார்கள் எழுந்தன. தூத்துக்குடியில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட பூனைகள் பிடித்து செல்லப்பட்டு உள்ளதாக செல்லப்பிராணிகள் ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
தூத்துக்குடி பூபாலராயர்புரம், திரேஸ்புரம், சங்குகுளி காலனி, குருஸ்புரம், இன்னாசியார்புரம், மேட்டுபட்டி, விவேகானந்தாநகர், கிருஷ்ணராஜபுரம், சுந்தரவேல்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரியும் பூனைகளை மர்மநபர்கள் பிடித்து செல்லும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகின. அந்த காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தின. எனவே, சாலையோர கடைகள், ஓட்டல்களில் இறைச்சிக்காக பூனைகளை பிடித்து செல்கிறார்களா? அல்லது நாட்டு மருந்து தயாரிப்பதற்காக பூனைகளை பிடித்து செல்கிறார்களா? என்ற சந்தேகம் எழுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து தூத்துக்குடியில் உள்ள போலீஸ் நிலையங்களில் 4 பேர் புகார் மனு அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் மனு ரசீது வழங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் பூனைகளை பிடித்து செல்லும் மர்மகும்பலை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.