கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது

கோவையில் உள்ள கார்த்திகாவின் இல்லத்திற்குச் சென்ற தாராபுரம் போலீசார் அவரையும், அவரது கணவரையும் கைது செய்தனர்.

கோவை,

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

தாராபுரம் இடைத்தேர்தல்

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர் கார்த்திகா. இவர் அக்கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். இடைத்தேர்தலின்போது, தாராபுரம், வீராச்சிமங்கலம் பிரிவு பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ள சென்றனர். அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

முதல்-அமைச்சர் ரோடு ஷோ

முதல்-அமைச்சர் விஜய் ரோடு ஷோ மேற்கொள்ள உள்ளதாகவும், இதனால் அந்தப் பகுதியில் அனுமதி வழங்கப்படாது எனவும் போலீசார் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வழக்குப்பதிவு

எங்கள் பிரசாரத்தை தடுக்கும் விதத்திலேயே போலீசார் செயல்பட்டு வருவதாகவும் ஒருதலைபட்சமாக போலீசார் செயல்படுவதாகவும் கூறி, அப்பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் பயணிக்கும் சாலையில் மறியலில் ஈடுபட்டது, காவல் நிலையத்தை முற்றுகையிட்டது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கார்த்திகா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

கைது

இந்த நிலையில், கோவையில் உள்ள கார்த்திகாவின் இல்லத்திற்குச் சென்ற தாராபுரம் போலீசார் அவரையும், அவரது கணவரையும் கைது செய்தனர். விசாரணைக்காக தாராபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT