கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

4-வது இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி - கடந்த தேர்தலைவிட வாக்கு சதவீதமும் குறைவு

த.வெ.க. தலைவர் விஜய்யின் அரசியல் வருகையே நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் குறைவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

சென்னை,

2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதுவரை இல்லாத அளவுக்கு தேர்தல் முடிவு ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இருந்தது. தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் கட்சி என்ற 4 முனைப் போட்டியாக இந்த சட்டமன்ற தேர்தல் பார்க்கப்பட்டது.

தேர்தல் முடிவு போட்டியிட்ட ஒவ்வொரு கட்சியினருக்கும் இன்ப அதிர்ச்சியும், பேரதிர்ச்சியையும் கொடுத்து இருக்கிறது. அதில் நாம் தமிழர் கட்சிக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். நாம் தமிழர் கட்சி 2016-ல் இருந்து தேர்தல் களம் கண்டு வருகிறது. 'மக்களே எஜமானார்கள்' என்ற வகையில், 'தனித்து போட்டி' என்ற ஒற்றை தாரக மந்திரத்தை மட்டும் கையில் எடுத்துக்கொண்டு மக்களை சந்திக்கிறது.

அப்படி தேர்தல் களத்தில் 2016-ல் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. அப்போது 1.1 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றது. இதனைத்தொடர்ந்து 2017-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 2.15 சதவீதம் ஓட்டை வாங்கியது.

பின்னர், 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழ்நாட்டில் தனித்து போட்டியிட்டு, 3.9 சதவீத வாக்கை பெற்றது. 2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்தே களம் கண்டது. அதில் 6.6 சதவீத வாக்குகளை பெற்றது. அந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவினாலும், பெரும்பாலான தொகுதிகளில் 3-வது இடத்தை பிடித்தது. அதனையடுத்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் 8.2 சதவீதம் என்ற அளவிலான மக்கள் நம்பிக்கை வாக்கை பெற்று, மாநில கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்று வளர்ச்சி அடைந்தது.

இவ்வாறு வளர்ந்து வந்த நாம் தமிழர் கட்சி நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலிலும் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு, அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது. தோல்வி அடைந்த சோகம் ஒரு பக்கம் இருக்க, இதுவரை வாக்கு சதவீதத்தை உயர்த்தி கொண்டே வந்த அக்கட்சி, இந்த தேர்தலில் தோல்வியோடு சேர்த்து வாக்கு சதவீதத்தையும் இழந்திருக்கிறது.

2021-ல் 6.6 சதவீதம், 2024-ல் 8.2 சதவீதம் என இருந்து, இந்த தேர்தலில் அது பாதியாக குறைந்துபோய்விட்டது. அதாவது, மொத்தமாக 4 சதவீத வாக்குகளே (19,72,537 வாக்குகள்) பெற்றுள்ளது. 234 தொகுதிகளிலுமே 4 முனைப் போட்டியில் 4-வது இடத்துக்கு நாம் தமிழர் கட்சி தள்ளப்பட்டிருக்கிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் 4-வது இடமே பெற்றார். த.வெ.க. தலைவர் விஜய்யின் அரசியல் வருகையே நாம் தமிழர் கட்சியின் இந்த வாக்கு சதவீதம் குறைவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.