நாகப்பட்டினம்,
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அரசு வங்கிக் கணக்கை ஹேக் செய்து, ரூ.11 லட்சம் பணம் ஆன்லைன் மூலமாக திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி கணக்குகளை அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) வழக்கம் போல சரிபார்த்தனர். அப்போது, அரசு வங்கிக் கணக்கில் இருந்து அதிகாரிகளுக்குத் தெரியாமல் மர்மமான முறையில் ரூ.11 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பணப் பரிவர்த்தனை விவரங்களைக் கேட்டு விசாரித்தனர். இந்த முதற்கட்ட விசாரணையில், கேரளாவைச் சேர்ந்த இணைய ஹேக்கர்கள் இந்த அரசு வங்கிக் கணக்கை சட்டவிரோதமாக ஹேக் செய்து, பணத்தைக் கையாடல் செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
அரசு பொதுமக்களின் வரிப்பணத்தைக் கையாளும் அலுவலக வங்கிக் கணக்கிலேயே ஹேக்கர்கள் துணிகரமாக கைவரிசை காட்டியுள்ளதால், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உடனடியாக சைபர் கிரைம் போலீசாரிடம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தனர்.
அதிகாரிகளின் புகாரைத் தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அரசுப் பணத்தை கொள்ளையடித்து தலைமறைவாக இருக்கும் அந்த கேரள ஹேக்கர்கள் கும்பலை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.