தமிழக செய்திகள்

நாகர்கோவில்: ஓடும் ரெயிலில் மருந்துகடை உரிமையாளர் திடீர் உயிரிழப்பு

ரெயில்வே போலீசார் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துவிட்டு நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திற்கு விரைந்தனர்.

நாகர்கோவில்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஓடைத்தெரு மணி நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 40). இவர் அந்த பகுதியில் மருந்துகடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இந்தநிலையில் கணேசன் கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த முடிவு செய்தார்.

இதற்காக அவர் தனது உறவினர் காளிதாஸ் என்பவருடன் மதுரையில் இருந்து புனலூர் நோக்கி வந்த ரெயிலில் பயணம் செய்தார். அந்த ரெயில் நேற்று அதிகாலையில் நாகர்கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது, கணேசனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. நேரம் செல்ல செல்ல அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர் காளிதாஸ் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரெயில்வே போலீசார் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துவிட்டு, நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திற்கு விரைந்தனர்.

அந்த ரெயில் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும், ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் விரைந்து வந்து ரெயில் பெட்டியில் இருந்த கணேசனை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கணேசனின் உடலை ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த புறப்பட்ட கணேசன் உடல் நலக்குறைவால் ஓடும் ரெயிலில் திடீரென பலியான சம்பவம் அவரது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.