கன்னியாகுமரி,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று நாகர்கோவிலில் பிரமாண்ட சாலைப் பேரணி நடத்தினார். இதற்காக டெல்லியில் இருந்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார். அதன்பின், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி நாகர்கோவில் வந்து சேர்ந்தார்.
வேப்பமூடு பகுதியில் இருந்து வடசேரி சாலை வரை திறந்தவெளி வாகனத்தில் சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு பிரதமர் மோடி சாலைப் பேரணி மேற்கொண்டார். இந்த பேரணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில் சாலைப் பேரணி தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
நாகர்கோவிலில் நடைபெற்ற சாலைப் பேரணி ஈடு இணையற்ற உற்சாகத்தால் நிரம்பி இருந்தது. திமுகவின் தவறான நிர்வாகத்தையும் ஊழலையும் தமிழ்நாடு விரும்பவில்லை என்பது தெளிவாக உள்ளது. மாநிலத்தில் மக்களை மையமாகக் கொண்ட சிறந்த ஆட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணி வழங்கும். சாலைப் பேரணியின் ஒரு சிறப்பு வாய்ந்த தருணத்தை இங்கே காணவும்..." இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.