சென்னை,
நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் பெரிய ஆண்டவர் கந்தூரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந்தேதி தொடங்கி 14 நாட்கள் நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்காக நாகூர் தர்காவுக்கு 45 கிலோ விலையில்லா 'ஜைப்போகல்' இரண்டாம் வகுப்பு சந்தனக்கட்டைகளை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், முதல்-அமைச்சர் விஜய் அரசாணையை தர்கா அறங்காவலர்களிடம் வழங்கினார். இதற்கிடையே தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு அமைச்சர் ஷாஜகான் அளித்த பேட்டியில், "நாகூர் தர்கா கந்தூரி விழாவை சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாளை (இன்று) மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து பேசவுள்ளோம். தர்கா புனரமைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை முதல்-அமைச்சரிடம் கொடுத்துள்ளோம். அவற்றை பரிசீலிப்பதாக அவர் கூறியுள்ளார்.
நாகூர் தர்கா யானை இறந்து 12 ஆண்டுகள் ஆன நிலையில், யானை வேண்டும் என்ற அறங்காவலர்களின் கோரிக்கையையும் முதல்-அமைச்சரிடம் வைத்தோம். அதையும் தருவதாக அவர் கூறியுள்ளார். சந்தனக்கட்டைகள் வழங்குவதில் அரசியல் தலையீடு இருப்பதாக வெளியான தகவல்கள் தவறானவை" என்றார். அப்போது அமைச்சர்கள் பர்வேஸ், ரஞ்சித்குமார் மற்றும் நாகூர் தர்கா அறங்காவலர்கள் உடனிருந்தனர்.