தமிழக செய்திகள்

நயினார் நாகேந்திரனுடன் சரத்குமார் சந்திப்பு

சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சரத்குமார் சந்தித்து பேசினார்.

நடிகரும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியுமான சரத்குமார், கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது தனது சமத்துவ மக்கள் கட்சியைப் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்தார். அதன்படி பாஜகவில் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் அவருக்குக் கட்சியில் பெரிய அளவில் பொறுப்புகள் வழங்கப்படவில்லை எனவே பாஜக தலைமையின் மீது அதிருப்தியில் இருந்து வந்தாக கூறப்படுகிறது. அதோடு அவருடைய ஆதரவாளர்களுக்கும் பொறுப்புகள் எதுவும் பெரிய அளவில் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியிலும் அவர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை தியாகராயர்நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் தன்னுடைய ஆதரவாளர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் பாரதிய ஜனதா கட்சியில் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்தில், கட்சியில் இணைந்து 2 வருடமாகியும் எந்தவித பதவியும் பா.ஜ.க கொடுக்கவில்லை என்று சரத்குமார் தனது வேதனையை பதிவு செய்தார். அதனை தொடர்ந்து சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “நான் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக போவதாக பல செய்திகள் வந்தது. இந்த நிகழ்வில் எனக்கு இதுவரை ஏன் எந்தவொரு பொறுப்பும் வழங்கவில்லை என்ற ஆதங்கத்தை என்னுடைய ஆதரவாளர்கள் பதிவு செய்தார்கள்.

பொறுப்புகள் கேட்ட எல்லாருக்கும் கொடுத்திருக்கிறார்கள். 19 மாநில நிர்வாகிகள் மாவட்ட ரீதியாக பொறுப்புகள் கொடுக்க வேண்டிய சூழலிலும் தேர்தல் வர நேரத்தில், எங்களுக்கு எந்த ஒரு பொறுப்பும் இல்லாவிட்டால் எப்படி செயல்பட முடியும்? என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். பாஜகவில் மாநிலத்திலும் மத்தியிலும் அதிகாரம் கேட்போம். இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக தலைமைக்கு கடிதம் எழுத உள்ளேன்.

பாஜகவின் மேடைகளில் எனது புகைப்படத்தை கூட வைக்காததால் ஆதரவாளர்கள் ஆதங்கத்தில் இருக்கின்றனர். கட்சி இணைப்பின்போது பாஜக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனது அதிருப்தியை பாஜக தலைமையிடம் தெரிவித்துள்ளேன்” என்று கூறியிருந்தார். பாஜக மீதான தனது அதிருப்தியை சரத்குமார் வெளிப்படையாக காட்டியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை சரத்குமார் சந்தித்து பேசியுள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், எனது ஆதங்கம் குறித்து கேட்டறிந்து பரிசீலனை செய்வதாக நயினார் நாகேந்திரன் கூறினார். என்று தெரிவித்தார்.