சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள மக்கள் பவனில் கவர்னர் ஆர்.வி. அர்லேகரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் இன்று சந்தித்துப் பேசினர். அப்போது தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக கவர்னரிடம் மனு அளித்துள்ளனர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-
உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் குழந்தைகளுடன் நடந்து கொண்ட விதம் குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் அல்லாத தனிநபர்கள் ஜான் ஆரோக்கியசாமியும், விஷ்ணு ரெட்டியும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னரிடம் நாங்கள் மனு கொடுத்திருக்கிறோம்.
அதுமட்டும் அல்லாமல், இந்த அரசு பொறுப்பேற்று 54 நாட்களில், 151 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், 85-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்திருக்கின்றன. கடந்த கால திமுக அரசுக்கும், இந்த அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் இருக்கிறது. முதல்-அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் என்று கவர்னரிடம் மனு மூலமாக தெரிவித்திருக்கிறோம்.
உடனடியாக எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. தவெக கட்சியினரே தவறு செய்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கவர்னர் எந்த வகையிலும், தமிழ்நாடு அரசின் அதிகாரத்தை எடுப்பதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை.
தவெகவுக்கு பின்புலத்தில் நாங்கள் இல்லை. அப்படி இருந்தால் அவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் யாருக்கும் பின்புலமாக இல்லை. பாரதிய ஜனதா கட்சி அகில இந்திய அளவில் மட்டும் இல்லை. உலக அளவில் மிகப்பெரிய கட்சி. மிகப்பெரிய தலைவரை, மோடியை பெற்றிருக்கிற கட்சி. இவ்வாறு அவர் கூறினார்.