சென்னை,
முதல்-அமைச்சர் விஜய் குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளரும், அமைச்சருமான வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தண்நு எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் குறித்தும், அவரது குடும்பம் குறித்தும் மிக மோசமான அருவருக்கத்தக்க வகையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின் பேசிய அநாகரிகமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
பாஜக சனாதனிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குறித்து இந்திய தலைமை அமைச்சர் மோடி பேசாத அவதூறா?
காஷ்மீரில் 8 வயது ஆசிபாவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தி, 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்து, வரவேற்பு அளித்தவர்கள் தான் பா.ஜ.க.வினர்.
பெண்களுக்கு எதிரான வெறுப்பும், அவதூறும் தான் அவர்கள் பேசும் அரசியலின் அடிப்படை. இதற்கு முன்னரும் நடிகை ஒருவர் குறித்தும் நயினார் அவர்களின் பேச்சு தரம் தாழ்ந்து அமைந்திருந்தது.
நயினார் நாகேந்திரன் அவர்கள் தமது அநாகரிகமான பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.