திருநெல்வேலி,
திருநெல்வேலி மாநகரம் டவுணில் உள்ள நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோவிலின் 520-வது ஆனித் தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பாகவும், திருவிழா அமைதியாகவும் நடைபெறுவதற்காக திருநெல்வேலி மாநகர காவல் துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
உலக புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் திருவிழாவின் எட்டாம் நாளில், அருள்மிகு நெல்லையப்பர் சுவாமியை மனமுருகி தரிசிக்கும் பாக்கியம் இன்று கிடைத்தது. இந்த புனித தருணத்தில், பாரத மக்கள் அனைவரும் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று அமைதியும் ஆனந்தமும் நிறைந்த வாழ்வை வாழ வேண்டும் என்று நெல்லையப்பர் சுவாமியிடம் மனமார பிரார்த்தித்தேன்.
மேலும், திருநெல்வேலி மக்களோடு மக்களாக இந்த நெல்லை சீமையின் மண்ணின் மைந்தனாக இணைந்து இந்த மகத்தான திருவிழாவில் பங்கேற்றது என்றும் மனதில் நிலைத்திருக்கும் அழகிய அனுபவமாக அமைந்தது.
அருள்மிகு நெல்லையப்பர் சுவாமி மற்றும் காந்திமதி அம்மாள் அருள் அனைவரின் வாழ்விலும் என்றும் பொழியட்டும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.