தமிழக செய்திகள்

தடையற்ற மின்சாரம் கிடைக்க நடவடிக்கை: தினத்தந்தி செய்தியை சுட்டிக்காட்டி: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் சற்று கூடுதல் கவனத்துடன் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கருகும் நிலையில் நெற்பயிர்கள்! கருணை காட்டுமா தவெக அரசு? மோட்டார் பம்பு செட்டுகளுக்கு தேவையான மும்முனை மின்சாரம் கிடைக்காததால், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை நெற்பயிர்கள் காய்ந்து சருகாகும் நிலையில் இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளை, தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் சற்று கூடுதல் கவனத்துடன் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறிவிக்கப்படாத மின்வெட்டு

இந்த ஆண்டிற்கான குறுவை சாகுபடி பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து இதுவரை நீர் திறந்துவிடப்படாத காரணத்தால், நடவு செய்த நெற்பயிர்களை காப்பாற்ற மோட்டார் பம்ப் செட்களையே பெரும்பாலான டெல்டா விவசாயிகள் நம்பியுள்ளனர். ஆனால், தவெக ஆட்சியில் தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுக்களால், மும்முனை மின்சாரம் கிடைக்காமல் மோட்டார் பம்ப் செட்கள் எல்லாம் முடங்கி போய் கிடப்பது, தழைந்து வரும் நெற்பயிர்களையும், உழைத்து களைத்த விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தையும் ஒருசேர பாழாக்கி விடும்.

போர்க்கால அடிப்படை

எனவே, சாதாரண பொதுமக்கள் முதல் நாட்டின் முக்கிய தொழில்கள் வரை அனைத்து தரப்பு மக்களையும் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் இந்த தொடர் மின்வெட்டு பிரச்சனையை, முதல்வர் விஜய் இனியும் அலட்சியமாக கையாள கூடாது. உபகரணங்கள் திருடுபோய்விட்டன, ஊரறிய புகார் கொடுத்துள்ளோம் என்ற உப்புச்சப்பில்லாத காரணங்களை கூறி கடமையை தட்டிக் கழிக்காமல், தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் அரசு முடுக்கிவிட வேண்டும்.

தண்ணீர் திறந்துவிட வேண்டும்

மேலும், மேட்டூர் அணையில் இருந்து இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும். அதுவரை மோட்டார் பம்ப் செட்கள் மூலம் பாசனம் செய்யும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் மானியம் வழங்க முன்வர வேண்டும். திமுக அரசை போல தவெக அரசும் விவசாயிகளின் வயிற்றில் அடித்து விட கூடாது என்பதை முதல்வருக்கு கோரிக்கையாகவே முன்வைக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.