தமிழக செய்திகள்

காவிரி, மேகதாது, முல்லைப்பெரியாறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ராகுல்காந்தியிடம் பேசுங்கள்: முதல்-அமைச்சர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தவெகவின் கூட்டணிக்கட்சியான காங்கிரஸ்தான் ஆட்சியிலிருக்கின்றன என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னை,

காவிரி, மேகதாது, முல்லைப்பெரியாறு பிரச்சினைகளுக்கு தீர்வு; ராகுல் காந்தியிடம், முதல்-அமைச்சர் விஜய் பேச வேண்டும். இது தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-

அவல நிலை

காவிரி, மேகதாது, முல்லைப்பெரியாறு அணைநீர் போன்ற பத்துக்கு மேற்பட்ட நீர் பிரச்சனைகளுக்கு, கர்நாடகா, கேரளா மாநிலங்களுடன் பல ஆண்டுகளாக, பேச்சு வார்த்தை நடத்தியும், நிரந்தர தீர்வு காணப்படாமல் தமிழகம் பரிதவித்து நிற்கும் அவல நிலையில் உள்ளது.

நிரந்தரமான தீர்வுகாண வேண்டும்

இந்நிலையில், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தவெக கூட்டணிக்கட்சியான காங்கிரஸ்தான் ஆட்சியிலிருக்கின்றன. மேலும், தவெக அரசில் காங்கிரஸ் அமைச்சர்களும் இருக்கிறார்கள். ஆகவே, தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் பேசி, காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, கேரளா முதல்-மந்திரிகளின் ஒத்துழைப்போடு, இந்த அணை பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வுகாண வேண்டும்.

கண்டிக்கத்தக்கது

இது ஒரு புறமிருக்க, மறுபுறம் மேகதாது அணையை கட்டுவதற்கு பிரதமர் மோடி, மறைமுக அனுமதி வழங்கியிருப்பதை போல, ஜோசப் விஜயின் தோழமைகட்சி தலைவரான வைகோ போன்றவர்கள் உண்மைக்கு மாறாக, நெறி தவறி பொதுவெளியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

உடனடி நடவடிக்கை

முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதைபோல் இல்லாமல், தமிழக மக்களின் நலனையும், விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தையும் மனதில் வைத்து தனது தோழமைக்கட்சி தலைவரான ராகுல்காந்தியிடம் பேசி, காவிரி, மேகதாது, முல்லை பெரியாறு அணை பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வுகாண உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.