தமிழக செய்திகள்

நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு: உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! - மாணிக்கம் தாகூர்

நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டு மக்களிடமும் முதல்-அமைச்சரிடமும் உடனடியாக நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை பேச்சு

முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரீகமாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. 'அப்பாவை காணோம்' என்ற முதல்-அமைச்சர் பேச்சுக்கு எதிர்வினையாக அவர் அநாகரீகமாக பேசியதாக கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் முதல்-அமைச்சர் விஜய் குறித்த நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இது முதல் முறையல்ல

அரசியல் விரக்தியின் உச்சத்தில் முதல்-அமைச்சர் விஜய்யையும் அவரது தாயாரையும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இழிவாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல் நாகரிகமற்ற முறையில் தரம் தாழ்ந்து பேசுவது இவருக்கு இது முதல் முறையல்ல; தொடர் வாடிக்கையாகிவிட்டது.

பொதுவெளியில் கவனத்தைப் பெற பெண்களை இழிவுபடுத்தும் , தனது அருவருக்கத்தக்க பேச்சுக்குத் தமிழ்நாட்டு மக்களிடமும் முதல்-அமைச்சரிடமும் உடனடியாக நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.