தமிழக செய்திகள்

நல்லகண்ணு ஐயா அவர்களின் மறைவு மானுட சமூகத்தின் பேரிழப்பு- சிவகார்த்திகேயன் இரங்கல்

நல்லக்கண்ணு மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்த 24 நாட்களுக்கு மேலாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று மதியம் காலமானார். இதனைத் தொடர்ந்து தி.நகரில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நல்லகண்ணு உடல் வைக்கப்பட்டுள்ளார். பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நல்லகண்ணுவின் உடல் இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு அரசு மரியாதைக்கு பின்னர் ஊர்வலமாக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவருடைய உடல் மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், நல்லக்கண்ணு மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

"தமிழக அரசியல் வரலாற்றிலேயே எளிமையும் நேர்மையும் இணைந்த ஒரு உயர்ந்த மனிதர் – தோழர் நல்லகண்ணு ஐயா.

மக்களின் உரிமைக்காக வாழ்நாளை முழுவதும் அர்ப்பணித்த போராளி.

பொதுமக்களின் குரலாகவும்,

உழைக்கும் சமூகத்தின் நம்பிக்கையாகவும் திகழ்ந்தவர்.

அரசியலில் எளிமையாக வாழ்வதும் சாத்தியமே என்று வாழ்ந்து காட்டியவர்.

தோழர் நல்லகண்ணு ஐயா அவர்களின் மறைவு

மானுட சமூகத்தின் பேரிழப்பு.

இத்தகைய மகத்தான மனிதரின்பால் எனக்கேற்பட்ட ஈர்ப்பின் காரணமாகவே நான் அடிக்கடி அவரை சந்தித்தேன், ஐயா வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்த்திருப்பதே பெரும்பேறு

இன்று அவர் நம்மோடு இல்லாவிட்டாலும் அவரது கொள்கைகளும் போராட்ட வரலாறும் என்றும் நம்மை வழிநடத்தும், நூற்றாண்டு கண்ட ஐயாவின் புகழ் இன்னும் பல நூற்றாண்டு நிலைத்திருக்கும்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.