தமிழக செய்திகள்

நல்லக்கண்ணு: ஒரு சமூக போராளியின் அரசியல் பயணம்

சமூக போராளி, புத்தகவாதி, சமூக சீர்த்திருத்தவாதி என அழைக்கப்பட்ட நல்லக்கண்ணு இன்று நம்மோடு இல்லாவிட்டாலும் அவரது புகழும், அவர் செய்த சீர்திருத்தங்களும், போராட்டங்களும் என்னெறும் நினைவில் கூறப்படும்.

இந்திய சுதந்திர போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் எனத் தனது வாழ்நாளில் குறிப்பிட்ட பகுதியை போராட்டம், சிறை வாழ்க்கை என வாழ்ந்தவர் நல்லகண்ணு.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமன்றி இதர கட்சிகளின் தலைவர்களும் 'தோழர் ஆர்.என்.கே' என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டார்.

ஆரம்ப கால வாழ்க்கை

ஆர்.நல்லகண்ணு தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டத்தில் டிசம்பர் 16, 1925 அன்று ராமசாமி - கருப்பாயி தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரர்கள், ஐந்து சகோதரிகள். நல்லகண்ணுவின் குடும்பம் வேளாண் தொழிலைப் பாரம்பரியமாக கொண்ட வைணவக் குடும்பம் ஆகும்.

நல்லகண்ணு ஶ்ரீவைகுண்டம் காரனேசன் பள்ளியில் எஸ்.எஸ்..எல்.சி வரை படித்தார். மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். பின்னர், தமிழில் பி.எல்.ஓ படிப்பை இரண்டாண்டுகள் படித்த நிலையில் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டதால் பட்டப் படிப்பு படிக்க முடியாமல் போனது.

ஆசிரியர் அளித்த ஊக்கம்

ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்த நல்லகண்ணுவுக்கு பொதுவுடைமைக் கருத்துகளை பள்ளி ஆசிரியராக இருந்த பலவேசம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

பாரதியார், திரு.வி.கல்யாணசுந்தரம், விவேகானந்தர் ஆகியோரது படைப்புகளும் ஆசிரியர் பலவேசம் மூலமாகவே நல்லகண்ணுவுக்கு அறிமுகம் ஆகியுள்ளது.

பாரதியாரின் பாடல்களும் திரு.வி.கவின் எழுத்துகளும் தன்னை மாற்றியதாக நல்ல கண்ணு கூறி இருந்தார்.

"சாதிக் கட்டமைப்பை உடைப்பதும் சுரண்டல் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதுவும்தான் தன்னுடைய லட்சியமாக இருந்தது" என்று அவ்வபோது கூறி வருவார்.

ஆர்.நல்லகண்ணு தனது 12-ஆவது வயதில் 1937-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் சிறுவர்களுடன் இணைந்து செயல்பட தொடங்கினார்.

மாணவப் பருவத்தில் அரசியல் போராட்டங்களில் பங்கு கொண்ட நல்லகண்ணு 1943-1944 காலகட்டத்தில் 'கலைத் தொண்டர் கழகம்' என்னும் அமைப்பை உருவாக்கி அதன் செயலாளராக செயல்பட்டார். எட்டையபுரத்தில் பாரதி நினைவு மண்டபம் கட்ட இவ்வமைப்பின் சார்பில் ரூ.400 நிதி திரட்டி கொடுத்தார். பள்ளிப் பருவத்தில் காந்தியவாதியாக நல்லகண்ணு இருந்தார். அதன்பிறகு கம்யூனிஸ்ட்டாக மாறினார். 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார். திருநெல்வேலியில் நடந்த சுதந்திர போராட்டங்களில் அவர் பங்கெடுத்தார்.

கம்யூனிஸ்ட்டு கட்சியில் ஐக்கியம்

ஆர்.நல்லகண்ணு 1944-ம் ஆண்டு கம்யூனிஸ்ட்டு கட்சியில் உறுப்பினராக இணைந்தார். தோழர் சித்தமல்லி முருகையன் அவர்கள் மூலமாக பொதுவுடமை அரசியலில் பிரகாசித்தார்.

அதனை தொடர்ந்து சென்னையில் கம்யூனிஸ்ட்டு கட்சி இதழான ஜனசக்தியில் பணியாற்றியபோது ஶ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் நெல் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை அறிந்து ஜனசக்தியில் அம்மோசடியை குறித்து எழுதினார். மாவட்ட கலெக்டர் நெல் மூட்டைகளை மீட்க நடவடிக்கை எடுத்தார்.

ஆர்.நல்லகண்ணு 1948-ல் கம்யூனிஸ்ட்டு கட்சி தடைசெய்யப்பட்ட பின் தலைமறைவாக வாழ தொடங்கினார். டிசம்பர் 1949-ல் கைது செய்யப்பட்டு நெல்லை சதி வழக்கில் இணைக்கப்பட்டார்.

இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகத் தொடரப்பட்ட நெல்லை சதி வழக்கில் நல்லகண்ணு சேர்க்கப்பட்டார். அவரது மீசையை போலீஸ்காரர்கள் சுருட்டை வைத்துப் பொசுக்கினர். ஆனாலும், சக தோழர்களை அவர் காட்டிக் கொடுக்கவில்லை. இந்த வழக்கில் ஏழு ஆண்டுகள் நல்லகண்ணு சிறையில் இருந்துள்ளார்.

நாங்குனேரி சிறையில் ஓராண்டு இருந்த பின் 1950-ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை கொக்கிரகுளம் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கே ஏழாண்டு கால சிறை வாசத்திற்குப் பின் 1956-ல் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

சிறை காலத்தில் அரசியல் கைதிகளுக்கு பி வகுப்பு சிறையை ஒதுக்க வேண்டும் என 12 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். விடுதலையானவுடன் அன்றைய தமிழக முதல்-அமைச்சர் காமராஜரை சந்தித்து பிற கட்சி தோழர்களையும் விடுதலை செய்ய கேட்டு கொண்டார். அது சட்ட விதிகளுக்கு முரணானது என மறுக்கப்பட்டது. நல்லகண்ணுவின் முயற்சியின் காரணமாக அரசியல் கைதிகளுக்கு பி வகுப்பு சிறை கிடைத்தது.

ஆர்.நல்லகண்ணு ஜூன் 5, 1958 அன்று சாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அன்னசாமியின் மகள் ரஞ்சிதத்தை நெல்லையில் திருமணம் செய்து கொண்டார். காசி பாரதி, ஆண்டாள் என்று இரு மகள்கள். ஆர்.நல்லகண்ணுவின் மனைவி ரஞ்சிதம் 2016-ம் ஆண்டு மறைந்தார்.

1967-ம் ஆண்டு நொச்சிகுளத்தில் விவசாயிகள் அவர்கள் பயிரிட்டு வந்த நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்து ஆர்.நல்லகண்ணுவின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை ஒடுக்குவதற்காக காவல் துறை துப்பாக்கி சூட்டினை நடத்தியது. அதனை கண்டித்து 12 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். இறுதியில் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.

ஆர்.நல்லகண்ணு 25 ஆண்டுகள் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார்.

இதே காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் நிலச்சுவான்தார்களின் கைகளில் நிலம் இருந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் தலித் மக்கள் வீடுகளையோ நிலங்களையோ வைத்துக்கொள்ள முடியாத நிலை இருந்துள்ளது.

"நிலையான வீடு இல்லாததால் தலித் மக்களை 'ஓடும் குடிகள்' என அழைத்தனர். இதற்கு எதிராக தலித் மக்களைத் திரட்டிப் போராடி அவர்கள் குடியிருப்பதற்கான மனை உரிமையை நல்லகண்ணு பெற்றுத் தந்தார்.

வெளிநாடு சுற்றுப்பயணம்

1969-ல் கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் விவசாயிகள் பிரதிநிதியாக கிழக்கு ஜெர்மனிக்கு சென்றார். இருபது நாட்கள் சுற்று பயணத்திற்கு பின்னர் மாஸ்கோ, லெனின்கிராடில் ஐந்து நாட்கள் தங்கியிருந்து நாடு திரும்பினார்.

1973-ல் சோவியத் யூனியன் மூன்று மாத கால மார்க்சிய பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டார்.

நல்லகண்ணுவின் அரசியல் பயணத்தில் விவசாய சங்கத்தின் பணிகளே பிரதானமாக இருந்துள்ளது. 1970 ஆம் ஆண்டில் நடந்த நில மீட்சிப் போராட்டத்தில் ஒரு சிலரின் கைகளில் இருந்த நிலங்களை மீட்பதற்காக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்தது. அப்போது தமிழ்நாட்டில் மடங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் தொடர்பான விவரங்களைத் தொகுத்து சிறிய நூல் ஒன்றை நல்லகண்ணு வெளியிட்டார்.

தென் மாவட்டங்களில் சாதி கலவரத்தை ஓடுக்கியவர்

தென் மாவட்டங்களில் 1996-ம் ஆண்டு முக்குலத்தோர் மற்றும் தலித் மக்களுக்கு இடையே சாதிக் கலவரம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக நல்லகண்ணுவின் மாமனார் அன்னசாமி கொல்லப்பட்டார்.

அது கொந்தளிப்பான நேரம். சற்று பிசகினாலும் அசம்பாவிதம் நடந்திருக்கும். ஆனால் அமைதியை ஏற்படுத்தும் பணியில் நல்லகண்ணு ஈடுபட்டார். 'சிலர் செய்த தவறுக்காக ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்க முடியாது' என்பதை அவர் நிலை நிறுத்தினார்

மதுரையில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தலித் ஊராட்சித் தலைவர்கள் பதவியேற்க முடியாத சூழல் நிலவியது. இதை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்த நல்லகண்ணு, சுமார் நான்காயிரம் பேரைத் திரட்டி மாபெரும் உண்ணாவிரதம் இருந்தார்.

"இந்தப் போராட்டம் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது. 2006ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தலைமையிலான அரசு, தேர்தலை நடத்தியே தீருவது என முடிவெடுத்து தேர்தலை நடத்தியது நல்லக்கண்ணுவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும்.

நீதிமன்றத்தில் வாதாடிய நல்லக்கண்ணு

கடந்த 2010ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் அரசு மற்றும் தனியார் மணல் அள்ளுவதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு நீதிபதிகள் பானுமதி, நாகமுத்து அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நேரடியாக ஆஜராகி நல்லகண்ணு வாதாடினார்.

"அப்போது அவருக்கு 86 வயது. இந்த வழக்கில் சட்டரீதியான வாதங்களைவிட அவர் முன்வைத்த உணர்வுபூர்வமான வாதங்கள் எடுபட்டன. தாமிரபரணி ஆற்றுக்கும் ஊருக்கும் உள்ள தொடர்பைப் பற்றியும் தனது இளமைக் காலத்துடன் ஆற்றுக்கு உள்ள தொடர்பைப் பற்றியும் அவர் நீதிமன்றத்தில் பேசியது புல்லரிக்க வைத்தது.

தாமிரபரணி ஆறு செல்லும் இடத்தின் மணல் திட்டில் கொங்கராயன் குறிச்சி, ஆறாம் பண்ணை ஆகிய கிராமங்கள் உள்ளதாகக் கூறி அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நல்லகண்ணு அழுத்தமாக வாதிட்டார்.

மேலும், "இதன்பிறகு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நிலவியல் தொழில்நுட்பத்துறையின் தலைவர் முனைவர் சந்திரசேகர், அதே பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் அருணாச்சலம், மதுரை ஐகோர்ட்டின் பதிவாளர் சேஷஷாயி ஆகியோர் கொண்ட சட்ட ஆணையத்தை நீதிமன்றம் நியமித்தது.

அந்த ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கு மணல் அள்ளுவது தடுக்கப்பட்டது. இந்த வெற்றி நல்லக்கண்ணு ஒரு சிறந்த போராளி என்று பாராட்டு பெற்றார்.

இந்த மணலின் மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும் என நிபுணர் குழு அப்போது அறிக்கை அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலில் போட்டி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் கிளைச் செயலாளர், இடைக் கமிட்டி செயலாளர், விவசாய சங்கத்தின் மாநில செயலாளர், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர், நிர்வாகக் குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், மாநில செயலாளர் எனப் பல பொறுப்புகளை நல்லகண்ணு வகித்துள்ளார்.

தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டுள்ளார். 1980ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பாசமுத்திரத்தில் போட்டியிட்டு நல்லகண்ணு தோல்வியைத் தழுவினார். அந்தத் தேர்தலில் அதிமுக-வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்தது. அவருக்காக எம்.ஜி.ஆர் நேரடியாகப் பிரசாரம் செய்தார்.

கடந்த 1999ஆம் ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் நல்லகண்ணு தோல்வியடைந்தார்.

அப்போது கோவையில் குண்டுவெடிப்பு சம்பவம் பிரதானமாகப் பேசப்பட்டதால், 'முஸ்லிம்களுக்கு ஆதரவானவர் நல்லகண்ணு' என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. "இதை மறுக்காத நல்லகண்ணு, 'வாக்கு வங்கிக்காக மாற மாட்டோம். சிறுபான்மையினர் நலனில் எப்போதும் அக்கறையுடன் இருப்போம்' என பிரசாரம் செய்தார் நல்லக்கண்ணு.

மாற்று கட்சியினரும் மதிக்கும் மனம் படைத்தவர்

மாற்றுக் கட்சியினரும் மதிக்கும் நல்லகண்ணுவின் வாழ்வில் ஆறாத சோகத்தை 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளம் ஏற்படுத்தியது.

சென்னை சி.ஐ.டி காலனியில் நல்லகண்ணு வசித்த வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்தபோது அவரைக் காப்பாற்ற படகு ஒன்று வந்துள்ளது. மற்றவர்களையும் காப்பாற்றிவிட்டு என் அருகே வாருங்கள் என அவர் கூறியதை இன்றளவும் நினைவு கூர்கின்றனர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள்.

அந்த வெள்ளத்தில், தான் சேர்த்து வைத்திருந்த 2,000க்கும் மேற்பட்ட அரசியல், தத்துவம், சங்க இலக்கியங்கள் தொடர்பான புத்தகங்கள் நீரில் கரைந்து தூளாகிவிட்டதாக கண்ணீர் வடித்தார். மழை எனக்குக் கொடுத்த சோகம் இதுதான் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

* தமிழக அரசின் அம்பேத்கர் விருது (2007)

* தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது (2022)

மத்திய அரசு இவருக்கு 'பத்ம பூஷன்' விருதை வழங்கி கவுரவித்தது (2009-ல் அறிவிக்கப்பட்டது.பின்னர் அவர் விருதை மறுத்து, இன்னும் பலருக்கு விருது கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்).

தோழர் நல்லகண்ணு பொது வாழ்வு எப்படிப்பட்ட தகுதியான வாழ்க்கையாக அமைய வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டு.

பரிசுதொகையை நிவாரண நிதிக்கு அளித்தவர்

தமிழ்நாட்டுக்கும் தமிழின் வளர்ச்சிக்கும் பாடுபட்டதாகக் கூறி கடந்த 2022ஆம் ஆண்டு தகைசால் தமிழர் விருதை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதற்காகத் தனக்குக் கொடுக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் தன்னுடைய பணமான 5,000 ரூபாயையும் சேர்த்து முதலமைச்சரின் நிவாரண நிதிக்கே நல்லகண்ணு வழங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தன்னுடைய பிறந்தநாளுடன், தான் அங்கம் வகிக்கும் கட்சிக்கும் நூற்றாண்டு என்பதால் அதுகுறித்து நல்லகண்ணு பேசுகையில்,

"நூறாண்டு என்பது அரசியல் கட்சிக்கு ஒரு வயதல்ல. வைரம் பாய்ந்த அனுபவம் செறிந்த ஓர் அமைப்பு இது. ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களுக்காகத் தொடர்ந்து போராட வேண்டும். வகுப்புவாத அபாயத்தை உணர்ந்து கவனமாகச் செயலாற்ற வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

இப்படி அரசியலில் நூற்றாண்டு கண்ட அரசியல் வித்தகர், சமூக போராளி, புத்தகவாதி, சமூக சீர்த்திருத்தவாதி என அழைக்கப்பட்ட நல்லக்கண்ணு இன்று நம்மோடு இல்லாவிட்டாலும் அவரது புகழும், அவர் செய்த சீர்திருத்தங்களும், போராட்டங்களும் என்னெறும் நினைவில் கூறப்படும்.