நாமக்கல்,
நாமக்கல்லில் ஏ.டி.எம்.களில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் மையங்களில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்தன. ஏடிஎம் மையங்களில் பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பி பணத்தை எடுப்பதற்கு உதவுவதுபோல் நடித்து கொள்ளையர்கள் பொதுமக்களின் ரகசிய பாஸ்வேர்டுகளை கவனித்துக்கொண்டு அசல் ஏடிஎம் கார்டுகளுக்கு பதில் போலி ஏடிஎம் கார்டுகளை மாற்றிக்கொடுக்கின்றனர். பின்னர், பொதுமக்களின் அசல் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பணத்தை திருடி வந்தனர்.
அதன்படி, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள பில்லூர் பகுதியை சேர்ந்த குழந்தை சாமி என்பவரிடமிருந்து 2 லட்சத்து 21 ஆயிரம் ரூபாயும், சரஸ்வதி என்பவரிடமிருந்து 1 லட்சம் ரூபாயும், குப்புசாமி என்பவரிடமிருந்து 75,000 ரூபாயும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். இது தொடர்பாக பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், பரமத்தி வேலூர் அருகே உள்ள சுங்கச்சாவடியில் இன்று காலை சந்தேகத்திற்கிடமாக வந்த பைக்கை நிறுத்தி தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ஏடிஎம்களில் தொடர்ந்து கொள்ளையடித்து வந்த 2 பேர் போலீசாரிடம் சிக்கினார். இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ஏடிஎம்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இருவரும் அரியானா மாநிலத்தை சேர்ந்த சந்தீப் (வயது 40, கமர்வீர் (வயது 42) என்பது தெரியவந்தது. மேலும், இருவரிடமிருந்து 361 ஏடிஎம் கார்டுகள், ரூ. 47,500 ரொக்கம், 2 பைக்குகள், 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் மேலும் சில வடமாநிலத்தவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.