நாமக்கல்,
நாமக்கல் முட்டையின் கொள்முதல் விலை மேலும் 10 காசுகள் உயர்ந்து ரூ.6.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்பட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இதில் 8 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு நாள்தோறும் 7 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது.
இவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு(என்.இ.சி.சி.) விலையை நிர்ணயம் செய்கிறது.
இந்த நிலையில் நேற்று நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடந்தது. இதில் முட்டையின் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.6.40 ஆக நிர்ணயிக்கப்பட்டநிலையில், தற்போது மேலும் 10 காசுகள் உயர்ந்து ரூ.6.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் புரட்டாசி மாதம் முடிந்ததை தொடர்ந்து கடந்த 14 நாட்களாக முட்டை விலை ஏறுமுகமாக உள்ளது. கடந்த 6 நாட்கள் தொடர்ச்சியாக விலை உயர்ந்து 80 காசுகள் வரை அதிகரித்துள்ளது. முட்டை விலை உயர்ந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.