நாமக்கல்,
சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சில் 45 பயணிகள் இருந்தனர். பஸ்சை சவுந்தரராஜன் என்பவர் ஓட்டினார். குமாரபாளையம் அருகே பாறையூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோர கால்வாய் சுவரின் மீது மோதி, அதே வேகத்தில் வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் பஸ்சில் பயணம் செய்தவர்கள் கூச்சலிட்டனர்.
இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் முருகன், குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் ஆம்புலன்சுகளில் ஏற்றி குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.